புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்துடன் இணைத்து வைக்கப்பட்ட விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்களை வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் பொலிஸ் சமூகநலப் பிரிவுடன் இணைத்துக்கொள்வதற்கு சிவில் பாதுகாப்புத் திணைக்களம் நடவடிக்கை
மேற்கொண்டுள்ளது.
இதில் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களாக கடமையாற்றும் 200 முன்னாள் போராளிகளுக்கே இந்த சந்தர்ப்பம் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தகவலை சிவில் பாதுகாப்புத் திணைக்கள ஆணையாளர் நாயகம் சந்திரரத்ன பல்லேகம குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களில் மொழிக் கையாள்கையில் ஏற்படும் பிரச்சினைகளைத் தவிர்க்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
குறித்த பிரதேசங்களில் புனர்வாழ்வு பெற்ற சுமார் 3,500 இற்கும் அதிகமான முன்னாள் போராளிகள் சிவில் பாதுகாப்பு சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர்
சுட்டிக்காட்டினார்.
இவ்வாறு சிவில் பாதுகாப்பு சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ள 3,500 பேரில் 200 பேர் பொலிஸ் சமூகநலப் பிரிவுடன் இணையவுள்ளனர்.
இவர்களுக்கு பொலிஸ் துறை, சட்டம் மற்றும் ஒழுங்கு உள்ளிட்ட விடயங்களை தெளிவுபடுத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக ஆணையாளர் நாயகம் கூறியுள்ளார்.
மேலும், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் மொழிக் கையாள்கையில் நிலவும் பிரச்சினைகளுக்கும் இதன் ஊடாக தீர்வினை எட்டமுடியும் என்றும் அவர்நம்பிக்கை
வெளியிட்டுள்ளார்.
பொலிஸ் சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ள புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளான சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தொடர்பில் பொலிஸாருடன் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றிலும் கைச்சாத்திடவுள்ளதாக சந்திரரத்ன பல்லேகம
குறிப்பிட்டார்.
பொலிஸ் சேவையில் ஏற்கனவே சுமார் 1950 புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளான சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர்
சுட்டிக்காட்டியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக