தற்போது ஐ.நா மனித உரிமைப் பேரவையின் 34வது கூட்டத்தொடர் நடந்துவரும் நிலையில், வரும் மார்ச் 22ல் இலங்கை மீதான விவாதம் அங்கு நடைபெறவுள்ளது.
இந்நிலையில், ஐ.நா மனித உரிமைப் பேரவையின் 2015 தீர்மானத்தின் அடுத்தக் கட்டம் குறித்த தமிழர்களின் பார்வை இப்போது ஓரளவுக்கு தெளிவாகி வருகிறது. இது வரவேற்க தக்கதாகும்.
இலங்கை மீதான குற்றச்சாட்டுகளை ஐ.நா பாதுகாப்பு அவைக்கு அனுப்ப வேண்டும் என்கிற கோரிக்கைக்கு மத்தியில், "ஐ.நா மனித உரிமைப் பேரவையின் தற்போதைய தீர்மானத்தின் காலத்தினை மேலும் நீட்டிக்க வேண்டும்" என்றும்
"அதனை தொடர்ந்து ஐ.நா மனித உரிமைகள் பேரவை கண்காணிக்க வேண்டும்" நாடுகடந்த தமிழீழ அரசு ஏற்படுத்திய வல்லுநர் குழு 28.02.2017-ல் பரிந்துரை செய்துள்ளது.
இதே கோரிக்கைதான் கடந்த 25.02.2017ல் சென்னையில் பசுமைத் தாயகம் நடத்திய ஐ.நா மனித உரிமைப் பேரவையும் ஈழத்தமிழர் நீதியும்: அடுத்தது என்ன? UNHRC 34வது கூட்டத்தொடர் குறித்த கலந்துரையாடல் - கூட்டத்திலும் பேசப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
குழப்பம் என்ன?
2015 ஐநா மனித உரிமைப் பேரவை தீர்மானத்தினை செயல்படுத்த இலங்கை அரசுக்கு மேலும் கால நீட்டிப்பு வழங்கக் கூடாது எனவும், இந்த விவகாரத்தை ஐ.நா பொதுச்சபைக்கு அனுப்ப வேண்டும் என்றும் பலரும் கோரிக்கை வைத்தனர். இது நியாயமான கருத்தே ஆகும்.
எனினும், ஐ.நா மனித உரிமைப் பேரவையில் இன்னொரு தீர்மானமே வரக்கூடாது என்பது போலவும், இந்த விடயத்தை ஒரேயடியாக ஐ.நா மனித உரிமைப் பேரவை கைக்கழுவ வேண்டும் என்பது போலவும் சிலர் பேசத்தொடங்கினர்.
(அதாவது, பொதுச்சபைக்கு இந்த விவகாரம் கொண்டு செல்லப்பட்ட பின்னர், மனித உரிமைப் பேரவையில் வேலை இல்லை என்பதான தவறான புரிதல் உருவானது).
இதன் அடுத்தக்கட்டமாக, "இலங்கை மீது ஒரு தீர்மானத்தை முன் வைக்கப்போவதாக இங்கிலாந்து அரசு கூறுவதே தவறு" என்றும், அத்தகைய தீர்மானத்தை அந்த நாடு பின் வாங்க வேண்டும்
என்றும் பேசினர்.
கடைசியில், "இன்னொரு ஐ.நா தீர்மானத்தை ஆதரிப்பவர்கள் தமிழினத் துரோகிகள்" என்கிற அளவுக்கு தவறான பிரச்சாரம் சென்றது.
'உண்மை என்ன?"
2015ஆம் ஆண்டில் வெளியான ஐநா மனித உரிமைகள் ஆணையர் அலுவலக விசாரணைக் குழுவின் அறிக்கை (OISL) மீதான சர்வதேச நடவடிக்கைகளை - நியூயார்க்கில் உள்ள ஐநா பொதுச்சபைக்கும், ஐநா பாதுகாப்பு அவைக்கும் - விரிவாக்க வேண்டும் என்பது சரியான
வியூகம்தான்.
அதற்காக, ஜெனீவாவில் உள்ள ஐநா மனித உரிமைப் பேரவையில் இருந்து இதனை கைவிட வேண்டும் என்பது மிகத் தவறான வாதம் ஆகும்.
இப்போதைக்கு, ஜெனீவாவில் மட்டுமே இலங்கை விவகாரம் உயிர்ப்புடன் உள்ளது. அதுமட்டுமல்லாமல், மனித உரிமைகள் மற்றும் நிலைமாற்ற நீதி (transitional justice) விவகாரங்களில் உலகின் உச்சமான
அமைப்பு இதுதான்.
இந்த அவையில் இலங்கை தொடர்ச்சியாக விவாதிக்கப்படுவதும், கண்காணிக்கப்படுவதும் மிக மிக மிக அவசியம் ஆகும். இதற்கு வரும் மார்ச் 23 ஆம் நாளன்று ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டே ஆக வேண்டும்.
அப்படி ஒரு தீர்மானம் வராமல் போய்விட்டால், இனி இலங்கையை கேள்வி கேட்பதற்கு ஒரு பன்னாட்டு அரங்கம் இல்லாமலேயே
பொய்விடும்.
எனவே, 'தீர்மானத்தில் என்ன இருக்கப்போகிறது' என்பதுதான் தமிழர்களின் கோரிக்கையாக இருக்க வேண்டுமே தவிர, 'புதிய தீர்மானமே தேவையில்லை' என்பது அல்ல.
மிகக் குறைந்த கோரிக்கையாக பார்த்தால் கூட, 2015 தீர்மானத்தை நீர்த்துப்போகச் செய்யக் கூடாது என்பதும், பழைய தீர்மானம் உடனடியாகவும் முழுமையாகவும் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதும்தான் முக்கியமானதாகும்.
அதே நேரத்தில், இந்த விவகாரத்தை ஐ.நா பொதுச்சபைக்கு அனுப்ப வேண்டும் என்கிற தமிழர்களின் கோரிக்கைக்கு 47 உறுப்பு நாடுகளில் ஒரே ஒரு நாடு கூட இதுவரை ஆதரவு அளிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
"குழப்பம் தவிர்க்க வேண்டும்"
ஈழத்தமிழர் நீதிக்கான போராட்டத்தினை ஐ.நாவினை இலக்காக வைத்து நடத்தும் போது, பல தவறான கருத்துகள் உருவாக்கப்படுகின்றன.
குழப்பம் 1. போர்க்குற்றம் என்று
சொல்லாதே!
போர்க்குற்றம், மானுடத்துக்கு எதிரான குற்றங்கள், இனப்படுகொலை ஆகிய மூன்றுமே கொடூரமான குற்றங்கள்தான் என்கிற நிலையில் 'போர்க்குற்றம்' என்று சொல்லாதே என்று சிலர் முழங்கினர்.
குழப்பம் 2. அமெரிக்க தீர்மானம் அயோக்கிய தீர்மானம்!
இலங்கையில் நடந்த குற்றங்கள் குறித்து ஐநா மனித உரிமை ஆணையர் அலுவலகம் விசாரணை நடத்த வேண்டும் என்கிற தீர்மானத்தை 2014-ல் அமெரிக்கா கொண்டு வந்தபோது - "அமெரிக்க தீர்மானம் அயோக்கிய தீர்மானம்" - என்கிற பிரச்சாரம் நடத்தப்பட்டது.
சென்னையில் அமெரிக்க நிறுவனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. ஆனால், அந்த தீர்மானத்தால் கிடைத்த விசாரணை அறிக்கைதான் (OISL Report 2015 http://www.ohchr.org/EN/HRBodies/HRC/Pages/OISL.aspx) இப்போது பன்னாட்டு அரங்கில் ஏற்கபட்ட ஒரே ஆயுதமாக உள்ளது.
2015ல் தற்போதைய தீர்மானத்தினையும் சிலர் எதிர்த்தார்கள். அதனை தீயிட்டுக் கொளுத்தினார்கள். ஆனால், இன்னமும் அந்த ஒரே தீர்மானம்தான் இந்த சிக்கலை சர்வதேச அரங்கில்
நிலைநிறுத்தியுள்ளது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>